#441 to #444

#441. உடலும், உயிரும்

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றோடு

வட்டத் திரை அனல், மாநிலம், ஆகாயம்,

ஒட்டி உயிர்நிலை என்னும் இக்காயப்பை

கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.

எட்டுத் திசைகளிலும் வீசும் காற்று.  வட்டமாக உலகைச் சூழ்ந்துள்ளது கடல்.  இவேற்றோடு தீ, பூமி, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களைக் கலப்பது சதாசிவன். உடலுடன் உயிரைச் சேர்ப்பதும் பின்னர் உடலிலிருந்து  உயிரைப் பிரிப்பதும் அவனே ஆவான்.

#442. உயிர்களை உய்விப்பான் 

 உச்சியில் ஓங்கி ஒளி திகழ் நாதத்தை

நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை

விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் 

தச்சும் அவனே சமைக்க வல்லானே.

தலை உச்சியில் பிரமரந்திரத்தில் விளங்கும் நாதத்தை  விரும்புபவர்கள் உயர்ந்த இன்பத்தை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு இறப்பு என்பதே இல்லை. சூரியன், சந்திரன் அக்கினி என்று விரியும் மூன்று சுடர்களையும் ஒரே சுடர் ஆக்குபவன் சதாசிவன். உயிர்களை உய்விப்பவனும் அவனே.

#443. அசையாதன அசையும்!

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்

குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன்

குசவனைப் போல் எங்கள் கோன் நந்தி வேண்டில்

அசைவில் உலகம் அது இது ஆமே.

சக்கரத்தில் வைத்த மண்ணைக் குயவன் தன்  விருப்பம் போல வடிப்பான். சதாசிவனும் அது போன்றே. அவன் விரும்பினால் அசையாத பொருளும் அசையும் பொருள் ஆகிய ஆத்மாவாக மாறிவிடும்.

#444. உள்ளக் கோவில்

விடையுடையான் விகிர்தன் மிகு பூதப்

படையுடையான் பரிசே உலகு ஆக்கும்

கொடையுடையான் குணம் எண் குணம் ஆகும்

சடையுடையான் சிந்தை சார்ந்து நின்றானே.

காளையை ஊர்தியாகக் கொண்டவன் சதாசிவன். அவன் பிறப்பற்றவன். பூதங்களின் படையை உடையவன். தன் விருப்பம் போல உலகினை  உருவாக்குவான். தன்னைப் பணிவோர் வேண்டுகின்ற வற்றை அவர்கள் வேண்டியவாறே அளிக்கும் கொடை வள்ளல். எண் குணம் உடையவன் சதாசிவன். சிந்தையில் குடி கொண்ட அவன் ஒளி வீசுகின்ற  சடையை உடையவன்.

Leave a comment